Friday 10 June 2016

I will always love you

இன்று புதிதாய் கதை சொல்ல எந்த புத்தகமும் இல்லை என் பக்கத்தில். ‘தனிமை அழகுதான்’ என்ற தலைப்பில் பேசி கொண்டு இருந்தாள் ஒரு பேச்சாளர். தொலைகாட்சியில். ‘இந்தப் பெட்டியுடனே பல நாட்கள் ஓடி விட்டதே,’ என்ற யோசனையில் ஆழ்ந்தேன். ‘யோசிக்க எதுவும் மிச்சம் இல்லை … அந்த நிகழ்ச்சியையே பார்’ என்று என்னை திட்டியது என் மூளை. பாவம் அதுவும் எவ்வளவு நாள் தான் அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைக்கும்? சப்தம் கூட்டினேன் என்ன தான் சொல்கிறான் என்று கேட்கலாம் என்று நினைத்த நொடியே வாசலிலிருந்து அழைப்பு மணி இசைத்தது. குயிலின் குரலாய் இருந்த மணி இன்று காகம் போல கறைந்தது. ‘அடுத்த செலவா? – பரவா இல்லை வீட்டை விட்டு வெளியே போக, மனிதர்களை பார்க்க ஒரு சந்தர்ப்பம். ம்ம்ம் மனிதர்கள் எவ்வளவு விதமாய் இருக்கிறார்கள்? – அன்று நீ தான் என் நண்பன், நீ தான் என் உலகம் என்று சொன்ன உயிர்கள் எல்லாம் இன்று எங்கே? வேலை, குடும்பம், மக்கள் என அவர் அவர் வாழ்கையை பார்த்து கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறார்களே. நானோ இங்கு ஓடுவது போல பாசாங்கு செய்தாலும் மனதிற்கு ஒப்பவில்லையே. எனது ஓட்டம் எபோழுதோ நின்று விட்டதே.’ மனதின் பாரம் தெரிய ஆரம்பித்தது. நண்பர்களை பார்க்கும் பொழுது சிரிக்கிறேன், ‘வீட்டில் இருக்கும் வீட்டுக்காரன்’ என்று சொல்லி மற்றவர்களையும் சிரிக்க வைக்கிறேன். அனால் கடந்ததை நினைக்காமல் இருக்க இயலவில்லை. ‘எல்லாம் காதலுக்காக தான்’ என்று நினைக்கையில் மனதில் ஒரு பெருமை துளிர் விடுகிறது. ஆனால் பின்பு வாழும்….. ‘இல்லை இல்லை நான் எங்கே வாழ்கிறேன்? நான் உயிரை மட்டும் வைத்து கொண்டு இருக்கும் உடலாய் தானே இருக்கிறேன்’. நாட்கள் மட்டும் பறந்து செல்கின்றது. ஆம் அது தான் நிஜம். இந்த பல ஆயிரம் நாட்கள் வெறுமை,சலிப்பு, சிறு சிறு சந்தோஷங்களுக்காக செய்த பல நூறு தவறுகள்-இதை எல்லாம் வெடித்து குமுறி அழ நினைத்தால் என் அகங்காரம் தடுக்கிறது. ஒரு ஆண் அழவே கூடாது என்று சொன்னது கண்டிப்பாக ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். அனைத்தையும் அழுது சொல்லிவிட்டு தண்ணியில் விழுந்த பஞ்சடைத்த பை போல இருக்கும் நெஞ்சை கதிர் நிலவில் வெடித்து பறக்கும் இலவம்பஞ்சு போல மாற்றிக்கொள்ளும் அந்த பாக்கியம் ஒரு ஆணுக்கு கிடைக்கவே கூடாது என்ற கீழ்த்தனமான எண்ணத்தில் தான் அப்படி சொல்லி இருக்க வேண்டும்.
‘வாயில் மணி அடித்தது அல்லவே? மறந்தே விட்டேன்.’ நிமிர்ந்தது பார்த்தேன். அவள் நின்றாள். ‘இன்றைய நாள் தான் என்ன? இன்று அவள் வருவாள் என்று சொன்னாளோ? கடைசியாக எப்பொழுது பேசினோம்? ஒரு மாதம் முன் இருக்குமோ?’ அவள் முகத்தை பார்த்தேன், வயது தெரிகிறது. ‘இவளையா உலக அழகி என்று ஊரு கேக்க சொல்லி கை பிடித்தேன்? இந்த உடுப்பு… இது தான்… இதைப் பார்த்து தானே நான் விழுந்தேன். ஒரு காலத்தில் இது தான் எங்கள் அடையாளமாய் இருந்தது. இதை காதலிப்பதனால் தான் அன்று சேர்ந்தோம் இன்று இப்படியும் இருக்கின்றோம்.’
பதினைந்து வருடங்களுக்கு முன் பார்த்தவுடன் காதல் என்ற படு ஆழமான குழியில் விழுந்தேன். ஒன்றாக சிரித்தோம், ஒன்றாக அழுதோம், ஒன்றாக பெயர் அறிய ஏதேதோ ஊர்களில் குடி புகுந்தோம், ஒன்றாக நாட்டை காத்தோம் பிறகு ஒன்றாகவே ஆனோம். ஒரு ஏளனமான சிரிப்பு என் உதடுகளில் எட்டி பார்த்தது. ‘காதல் – எவ்வளவு கொடுமையான விஷம் அது? என்னை எவ்வளவு மாற்றியது இந்த விஷம். நான் வீட்டை பார்த்துக் கொள்கிறேன் நீ நாட்டை பார்த்துக்கொள் என்று இந்த விஷம் தானே என்னை அன்று சொல்ல வைத்தது? என்னை விட பெரியவள் என்பதால் என்னை ஆளலாம் என்று எண்ணி விட்டாள் போலும். “இல்லை அது தவறு நம் சமூக விழுமியங்களுக்கு புறம்பானது” என்று சொல்ல வேண்டியவள் -”are you sure??” என்று பத்து முறை கேட்டுவிட்டு கிளம்பிப் போனாள். அந்த நாள் … ஐந்து வருடங்களுக்கு முன் … பாசத்துடன் அவளை நான் அனுப்பி வைத்தேன் – இல்லை நான் அனுப்பி வைக்கவில்லை அதுவும் விஷத்தின் செயல் தான்.’
‘தெரிந்தவர்கள் எல்லோரும் குழந்தைகள் பெற்று அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கையில் நான் இங்கே மழலை சொல் கேளாமல் பிணம் ஆகும் நாளை நோக்கி கொண்டு இருக்கிறேன். ஒரு பெண் அவள் – என் ஆண்மையின் கர்வத்தை புசித்து, நான் வாழ வேண்டிய வாழ்கையை வாழ்ந்து, என் முன்னே பெருமையுடன் நிற்கிறாள். இவளையா நான் காதலித்தேன் என்று எண்ணுகையில் அடிமனதிலிருந்து வெளி வர துடிக்கும் சுட்டெரிக்கும் நெருப்பு என் உச்சந்தலையில் ஏறுகிறது. “பளார் என்று அறைந்து விடட்டா – கொஞ்சம் ஆறுதலாகவாவது இருக்கும்,” என்று என் இதயத்தை கேட்கிறது என் கைகள்.’
சோபாவில் இருந்து எழுந்தேன் கை பிடி விலகி தடுமாறினேன், ‘பத்து வருடங்களாய் துணைவியாக இருக்கும் என் கைபிடிக்கே என்னை புரியவில்லை, என்னை கட்டியபின்னும் என்னிடம் இருந்து விலகியே இருந்தவளுக்கு என் வலி எப்படி புரியும்?’ அவளை நோக்கி நடந்தேன்.
அவளின் கண்களில் கங்கை கசிவது போல தெரிந்தது. ‘நான் அவளை கட்டி தழுவ வேண்டும் என்று பாசாங்கு செய்கிறாளோ? இவளால் நான் தொலைத்தது எத்தனையோ. இதில் இவளுக்கு அரவணைப்பும், சிரிப்பும், முத்தமும் தானா குறைச்சல்.’ என் மேலே படாமல் என்னை தாண்டி ஒரு நடை பிணம் போல படுக்கையறையை நோக்கி நடந்தாள். ‘ஓ… இந்த வீட்டில் படுக்கையறை எங்கே சமையலறை எங்கே என்று எல்லாம் இந்த அம்மணிக்கு ஞாபகம் இருக்கிறதா? பரவாயில்லையே.’ கதவு படார் என்று மூடிக்கொண்டது. என் தலை மீது நறுக்கென்று கொட்டியது போல இருந்தது அந்த சத்தம். வீடு மீண்டும் பட்டிமன்ற ஒலியால் நிறைந்தது.
பைத்தியம் பிடிப்பது போல் ஆக்கும் அந்த ஒலி என் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக தின்ன தொடங்கியது. ‘அவள் என் முன் நின்ற அந்த ஐந்து நிமிடங்கள் என் ஆழ் மனதை கிளறிவிட்ட அந்த சொல்லத் தெரியாத இசை எங்கே போனது?’ சட்டென்று உண்மை உரைத்தது. என் விஷம் கலந்த நினைவுகளால் நானே கட்டி வைத்த அந்த மாய வலை கிழிய தொடங்கியது.
‘அய்யோ என்ன செய்து விட்டேன்? என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் விட்டு விட்டேனே..எனக்கு வாழ்கையின் நுணுக்கங்களையும் அர்த்தத்தையும் கற்று கொடுத்த அந்தக் காதலை நான் விஷம் என்று நினைத்தேனா?’ என் மூளை, ‘போதும் யோசிக்காதே!! செய்யவேண்டியதை உடனே செய். சொல்ல வேண்டியதை காலம் நேரம் கடந்து போகும் முன்பே சொல்’, என்று கதறியது. படுக்கை அரை கதவுக்கு பக்கத்தில் போய் நின்றேன்.
‘அழகான பெண், குத்துவிளக்கு போல் உடல், சிங்கத்தை போல கர்ஜிக்கும் குரல், எதையும் முன் நின்று செய்யும் தைரியம் – இதைக் கண்டு தானே விழுந்தேன். அன்று இனித்தவை இன்று கசக்குகிறதோ எனக்கு? மதுரை கடவுளிடம் காளமேக புலவர் வேண்டிய பதினாறில் பதினைந்து பெற்றவள்… அதன் பொருளை எனக்கு காட்டியவள் என் தேவதை. அவள் சிரிப்பை பார்த்து கண் இமைக்கவும் மறந்து போன நிமிடங்கள். அவளின் குரலை கேட்க ஏங்கி ஒவ்வொரு வாரமும் நான் செய்த தவம். பல சமயம் என் தாயாய், சில சமயம் என் குழந்தையாய் – அவள் காட்டும் பாசம், அவள் குறும்புகள் கலந்த விளையாட்டு, எப்படி மறந்தேன்? நான் தானே அவளை போய் நாட்டை பார் என்று அடம் பிடித்து அனுப்பி வைத்தேன்? வேலை இருக்கிறது அடுத்த வாரம் பேச முடியாது ஒரே ஒரு முறை புரிந்துகொள் என்று அவள் அன்று கெஞ்சிய போது குரூர வார்த்தைகளால் அவளை ஏசி தொலைபேசியை உடைத்தவனும் நான் தானே. பின்பு அவளிடம் பேசாமல் பல மாதம் அவளை கொன்றதும் நான் தான் அல்லவா? சில சுகங்களுக்காக அவளை விலக செய்தேன். எல்லாம் தெரிந்து கொண்டு நண்பன் வழியே பேச வேண்டும் என்று தூது அனுப்பினாள். நான் அவளால் தான் எல்லாம் என்று குறை சொல்லி முடிக்கும் வரை மெளனமாக கேட்டுவிட்டு “I will always love you” என்று சொல்லி விட்டு தொலைபேசியை வைத்தவள் இன்று நேரில் என்னை தேடி வந்து இருக்கிறாள். மன்னிப்பு கேட்க துப்பில்லாமல் எதை எதையோ நினைத்து ஸ்தம்பித்து நின்று இப்பொழுது அவள் உள்ளே போனதும் உண்மைகளை பேச துடித்துக் கொண்டு இருக்கிறேன். கதவை திறந்து காலில் விழுந்துவிடவா? அதற்கு என் ஆண்மை இடம் கொடுக்குமா? என்ன செய்ய? எப்படி சொல்ல? வார்த்தைகளால் என் மனதில் நடக்கும் போராட்டங்களை எல்லாம் விவரிக்க முடியுமா?
அர்த்தநாரி நான்- அவள் இன்றி நான் இல்லை. புரிந்து கொண்டுவிட்டேன்… அதை சொல்ல வேண்டும்….பேச வேண்டும்… பேசிக்கொண்டே இருக்க வேண்டும்… நான் என்ன செய்தாலும் என்றும் சரி என்று சொல்லியவள் என் மன உளைச்சல்களை தான் புரிந்துகொள்ள மாட்டாளா என்ன?’
கதறி கொண்டிருந்த தொலைகாட்சிக்கு முன் சென்றேன். ‘நீ எனக்கு தேவை இல்லை என்னவள் வந்து விட்டாள் என்று அதனிடம் உரக்க சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த காலண்டரிலிருந்து ஒரு திகதிக் காகிதத்தை கிழித்து ஒரு வார்த்தையில் ஒரு கவிதை எழுதி முன்னிருந்த மேஜையில் வைத்தேன். பசியோடு வந்திருக்கும் என் கண்மனிக்கு பாஸ்தா என்றால் உயிர், வாங்கி கொண்டு வந்து அசத்துகிறேன் பார்,’ எண்ணிக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறினேன்.

No comments:

Post a Comment